இந்தியா

“நமது சகோதரிகளின் குங்குமத்தை யாராவது அழிக்க துணிந்தால்...” - பிரதமர் மோடி எச்சரிக்கை

வெற்றி மயிலோன்

தாஹோத்: “இந்திய சகோதரிகளின் குங்குமத்தை (சிந்தூர்) அழிக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்க முடியாத பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்தார்.

குஜராத்தின் தாஹோத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நிச்சயம். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல, இது நமது இந்திய மதிப்புகள் மற்றும் நம் இதயங்களில் நாம் வைத்திருக்கும் ஆழமான உணர்வுகளின் பிரதிபலிப்பாகும்.

அவர்கள் 140 கோடி இந்தியர்களுக்கு சவால் விடுத்தார்கள். அதனால்தான் நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததை நான் சரியாகச் செய்தேன். மோடி தனது மூன்று படைகளுக்கும் சுதந்திரம் வழங்கினார். மேலும், நமது துணிச்சலான வீரர்கள் கடந்த பல தசாப்தங்களாக உலகம் கண்டிராததைச் செய்தார்கள். நமது துணிச்சலான வீரர்கள் ஏப்ரல் 22 அன்று அவர்களின் தவறான பஹல்காம் சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அவர்களின் மிகப் பெரிய பயங்கரவாத முகாமை வெறும் 22 நிமிடங்களில் அழித்தனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவம் கிளர்ச்சியடைந்து துணிச்சலைக் காட்டியபோது, ​​நமது படைகள் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்தன. பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. பிரிவினைக்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இந்தியாவை வெறுத்து, நமது முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிப்பதுதான் அது.

ஆனால், நமக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது. தொடர்ந்து முன்னேறுவது, வறுமையை ஒழிப்பது மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவது. நமது ஆயுதப் படைகள் வலுவாக இருக்கும்போது மட்டுமே உண்மையிலேயே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும், அதேபோல் நமது பொருளாதாரமும் அப்போதுதான் வளரும். அந்த திசையில் நாங்கள் தொடர்ந்து முழு அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்" என்று மோடி பேசினார்.

SCROLL FOR NEXT