இந்தியா

“கேமரா முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

டெக்ஸ்டர்

புதுடெல்லி: “கேமராக்களுக்கு முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?” என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவுள்: “மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு இவற்றுக்கு பதில் கூறுங்கள்:

1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?
2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?

இந்தியாவின் கவுரவத்தை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக, ராஜஸ்தானின் தேஷ்நோக் அருகில் உள்ள பலானா பகுதியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, “இப்போது, ​​பாரத தாயின் சேவகன் மோடி இங்கே தலை நிமிர்ந்து நிற்கிறேன். மோடியின் மனம் குளிர்ந்திருக்கிறது. ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. இப்போது, ​​மோடியின் நரம்புகளில் ரத்தம் அல்ல, சூடான சிந்தூர் (குங்குமம்) பாய்கிறது” என்று பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், “போரில் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன. நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது தங்கள் உயிரை காப்பாற்ற பதுங்கும் இடங்களை தேடி ஓடுகின்றனர். தீவிரவாதிகளின் தலைமையகங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் புது வகையான நீதி வழங்கப்பட்டுள்ளது. இனிமேலும் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தால் அந்த நாடு யாசகம் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் பாகிஸ்தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது” என்று பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT