இந்தியா

திருமலையில் தொழுகை செய்த நபர் தமிழகத்தை சேர்ந்தவரா? - போலீஸார் தீவிர விசாரணை

என். மகேஷ்குமார்

திருமலை: திருமலையில் நேற்று மதியம் திடீரென ஒரு நபர் பகிரங்கமாக தொழுகை செய்தார். இது தொடர்பாக திருமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் திருமலையில் வேற்று மத பிரச்சாரங்கள், தொழுகைகள், ஆர்ப்பாட்டங்கள், தர்னா, பொதுக்கூட்டங்கள் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அலிபிரி சோதனைச் சாவடியிலேயே அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் மீது இதர மதம் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஸ்டிக்கர்களோ, படங்களோ, கட்சிக் கொடிகளோ இருந்தால் அந்த வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு திருமலையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திருமலையில் ‘கல்யாண வேதிகா’ என்னும் மண்டபத்தின் அருகே, தலையில் தொப்பி அணிந்தபடி ஒரு நபர், “ நான் இங்கு தொழுகை செய்ய வேண்டும். அதற்கு தகுந்த இடம் எங்கே இருக்கிறது”? என வெளியூர் பக்தர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு யாரும் பதில் கூறாததால், அவரே ஒரு இடத்தை தேர்வு செய்து, சுமார் 10 நிமிடங்கள் வரை தொழுகை செய்துள்ளார்.

இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் பின்னர், அந்த நபர் தொழுகையை முடித்துவிட்டு, தமிழக பதிவு எண் கொண்ட ஒரு காரில் அமர்ந்துள்ளார். அப்போது ஒரு நபர், அவரிடம் “ இங்கு தொழுகை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அதனையும் மீறி தொழுகை செய்துள்ளீர்கள்” என கூறியுள்ளார்.

அதுகுறித்து எனக்கு தெரியாது என அந்த நபர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அறிந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்று திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? எதற்காக திருமலைக்கு வந்தார்? தடையை மீறி தொழுகை செய்தது ஏன் ? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT