அக்னூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பெண்களின் பங்கு குறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டிஐஜி வரீந்தர் தத்தா பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாங்கள் எதற்கும் தயாராக இருந்தோம். அக்னூரில் எதிரிகள் எங்கள் நிலைகளை தாக்கத் தொடங்கியவுடன், நாங்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, அவர்களின் எட்டு நிலைகளை அழித்தோம். அவர்களின் வான்வழி கண்காணிப்பு அமைப்பையும் ஒரு ஏவுதளத்தையும் அழித்தோம்.
இந்த தாக்குதலில் பெண் வீரர்கள் தங்கள் ஆண் சகாக்களுடன் தோளோடு தோள் நின்றனர். தாங்கள் சக்தியின் மறுவடிம் என்பதை நிரூபித்தனர். எங்களின் ஒரு பெண் கமாண்டர் எதிரியின் ஒரு நிலையை முற்றிலுமாக அழித்தார்.
சம்பாவில் உண்மையான வீரர்களாக பெண்கள் போரிட்டனர். அவர்கள் தங்களின் அனைத்து பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றினர். எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல் அதிகரித்தவுடன் பட்டாலியன் தலைமையகத்தை இடம் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அவர்கள் பின்வாங்கவில்லை. அவர்கள் அங்கிருந்தே தங்கள் கடமைகளை நிறைவேற்றி தங்கள் தகுதியை நிரூபிக்க தயாராக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.