இந்தியா

உ.பி.யில் பாதுகாப்பற்ற 82 பாலங்கள் செயல்பாட்டில் உள்ளன: நீதிமன்றத்தில் அரசு ஒப்புதல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 82 பாலங்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அம்மாநில அரசு, இன்னும் அவை செயல்பாட்டில் உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலங்கள் தொடர்பான இம்மனுவை சமூக செயற்பாட்டாளரான ஞானேந்திர நாத் பாண்டே அளித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி மற்றும் நீதிபதி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய கிளை அமர்வு விசாரனை செய்கிறது. அந்த மனுவில், மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களின் கட்டமைப்புகளின் ஆய்வு நடத்தக் கோரப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பாக, 50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பாலங்கள் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பலவீனமான பாலங்கள் குறித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அமர்வு, உ.பி. அரசுக்கு ஒரு நோட்டீஸ் அளித்திருந்தது. இதில், பாதுகாப்பாற்ற பாலங்களின் இருப்பிடம் மற்றும் வயதை கண்டறிந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டிருந்தது.

இதற்கானப் பதிலில் உபி அரசு பல அதிர்ச்சியானத் தகவல்களை குறிப்பிட்டுள்ளது. உபியில் 82 பாலங்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டதாக அம்மாநில அரசு சார்பில் குறிப்பிடப்பட்டது. அதேசமயம், அவை அனைத்தும் இன்னும் கூட செயல்பாட்டில் உள்ளதாகவும் உபி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன், இந்த பாதுகாப்பற்ற பாலங்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அரசாங்கம் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருந்தது.இந்த விசாரணையின் போது, உபி மாநிலத்தில் மொத்தம் 2800 பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிமன்றம், உபி அரசின் அளித்த பதிலுக்கான நிலைமையை தெளிவுபடுத்தவும், அதன் நிபுணர்கள் குழுவின் விவரங்களையும் அடுத்த விசாரணையில் தாக்கல் செய்யுமாறு அரசிடம் கேட்டுள்ளது.

SCROLL FOR NEXT