சுமேர் இவான் டி குன்ஹா 
இந்தியா

பாகிஸ்தானில் எந்த இடத்தையும் தாக்க முடியும்: இந்திய ராணுவ வான் பாதுகாப்பு இயக்குநர் உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்த இடத்திலும் இலக்குகளை குறிவைத்து இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்று உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து ராணுவத்தின் வான் பாதுகாப்பு இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் சுமேர் இவான் டி குன்ஹா கூறியதாவது: ஒட்டுமொத்த பாகிஸ்தானும் நமது தாக்குதல் எல்லைக்குள் தான் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தனது தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்கவா போன்ற இடத்துக்கு மாற்ற விரும்பலாம்.

ஆனால் அதுவும் நமது தாக்குதல் எல்லைக்குள் தான் வரும். பாகிஸ்தானின் உட்பகுதி முழுவதும் சென்று தாக்குவதற்கு இந்தியாவிடம் போதுமான ஆயுத கையிருப்பு உள்ளது. எனவே எல்லையில் இருந்து அகன்ற பகுதி அல்லது குறுகிய பகுதி என எதுவாக இருந்தாலும் அது நமது தாக்குதல் எல்லைக்குள் தான் உள்ளது. தேவை ஏற்பட்டால் பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்த நமது ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்தியா பயன்படுத்துகிறது. நீண்ட தொலைவு ட்ரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட அனைத்தும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தன. நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆயுதப் படைகளுக்கு உள்ளது.

நமது இறையாண்மை, நமது மக்களை பாதுகாப்பது எங்கள் வேலை. பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து நமது தாய்நாட்டை எங்களால் பாதுகாக்க முடிந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தாக்குதலை முறியடித்துள்ளோம். இதனால் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர்.

போரில் ட்ரோன்களின் பயன்பாடு தற்போது முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில் துருக்கி மற்றும் சீனா அளித்துள்ள ட்ரோன்கள் பாகிஸ்தானிடம் நிறைய இருக்கலாம் என எதிர்பார்த்தோம். அதுபோலவே பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தியது. இதில் முதலில் விலை மலிவான ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் குறைந்த உயரத்தில் அந்நாடு அனுப்பியது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT