இந்தியா

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்: உம்மன் சாண்டி

செய்திப்பிரிவு

தன் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்த விசாரணை யையும் எதிர்கொள்ளத் தயார் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு தொழிற்சாலையில் கழிவுநீர் வெளியேற்றத் திட்டம் அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் உம்மன் சாண்டிக்குப் பங்கிருப்ப தாகவும் கூறி ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உம்மன் சாண்டி கூறியதாவது: "எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடக் கூடாது என்று கருதி நான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதையெல்லாம் தொழிலாளர் நலன் கருதிதான் செய்தேன்.

எந்த வகையான விசாரணை வேண்டுமானாலும் நடக்கட்டும். நான் என் முழு ஒத்துழைப்பையும் தருவேன். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும்.

1992ம் ஆண்டு பால்மோலின் வழக்கு மற்றும் சமீபத்தில் 'சோலார்' வழக்கு எனப் பல வழக்குகள் என் மீது தொடரப்பட்டபோது நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அப்போ தெல்லாம் நான் ராஜினாமா செய்திருந்தால் அது முட்டாள் தனமாக இருந்திருக்கும்". இவ் வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT