கோப்புப் படம் 
இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த 2 பேர் மும்பையில் கைது! 

செய்திப்பிரிவு

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புனேவில் ஐஇடி தயாரித்தது, சோதனை செய்தது தொடர்பான 2023-ம் ஆண்டு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தேடப்பட்டு வந்தனர். கைதானவர்கள் அப்துல்லா ஃபைஸ் சேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து இந்தியா திரும்பியபோது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தனர்.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களுக்கு எதிராக மும்பை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புனே ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களுடன் இணைந்து இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் மீது குற்றச்சதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் பயங்கராவாதம் மூலமாக நாட்டில் இஸ்லாம் ஆட்சியை நிறுவும் ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளுக்கு துணைபுரிவதற்காக இந்தியாவின் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு காவலில் இருப்பவர்களுடன் புனேவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஐஇடிகள் தயாரித்துள்ளனர். கடந்த 2022-23 காலக்கட்டத்தில் அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து பங்கேற்றும் உள்ளனர். மேலும், தாங்கள் தயாரித்த ஐஇடிகளை பரிசோதிக்க வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத திட்டங்களை முறியடிக்கும் முயற்சியில் அதன் செயல்பாடுகளை என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் மீதும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT