இந்தியா

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தார். ஆனால் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

காஷ்மீரின் பஹல்காமில் கொடூர தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த சுமார் 20 பேர் உதவி செய்திருக்கக்கூடும் என்று சந்தேதிக்கப்படுகிறது. இதன்பேரில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவம், போலீஸார், என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் தீவிரவாதிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கியதாக அகமது (23) என்பவர் பிடிபட்டார். குல்காமை சேர்ந்த அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு என்ஐஏ அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டனர்.

இதன்படி ராணுவம், போலீஸார், என்ஐஏ அடங்கிய குழுவினரை அகமது வனப்பகுதி வழியாக அழைத்துச் சென்றார். அப்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க அகமது திடீரென ஆற்றில் குதித்தார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் சடலமாக கரை ஒதுக்கினார்.

ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினரிடம் இருந்து அகமது தப்பி ஆற்றில் குதிக்கும் வீடியோவும் ட்ரோனில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “தீவிரவாதிகளுக்கு உதவி செய்த அகமது என்பவர் கடந்த சனிக்கிழமை பிடிபட்டார். வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அடையாளம் காட்ட கூட்டு படையினரை அவர் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றார். அப்போது திடீரென ஆற்றில் குதித்து தப்ப முயன்றார். ஆனால் ஆற்று வெள்ளத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT