இந்தியா

பாகிஸ்தான் பிரதமருக்கு சொந்தமான யூடியூப் உட்பட 17 சேனல்கள் முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்களை இந்தியாவில் முடக்க எடுக்கப்படும் தொடர் நடவடிக்கையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ சேனலும் சிக்கியுள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் 16 முக்கிய பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதில், டான், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், ஜியோ நியூஸ், போல் நியூஸ் உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றின் மொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 63 மில்லியன்.

இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளை இலக்காக வைத்து ஆத்திரமூட்டும், வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம் மற்றும் தகவல்களை பரப்பியற்காக இந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT