கோப்புப் படம் 
இந்தியா

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் ஆலோசனை: 40 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

செய்திப்பிரிவு

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், முப்படை தளபதி அனில் சவுகான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

SCROLL FOR NEXT