இந்தியா

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.சண்முகம்

ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்துக்கான மையம் சார்பில் உச் சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இம்மனு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, ‘ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2013-ன் படி, தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க பிரதமர், உள்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு விண்ணப்பங்கள் பெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஒருமனதாக இப்பதவிகளை நிரப்ப வேண்டும். பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் இந்த நியமனம் கூடாது என்று சட்டத்தில் தெளிவாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நியமனங்கள் அப்படி நடப்பதில்லை,’ என்று வாதிட்டனர்.

மத்திய அரசுக்கு உத்தரவு

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இம்மனு குறித்து மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT