உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கையில் சென்ற படகு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீரில் மூழ்கிய 18 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கங்கை நதியில் வாரணாசியிலிருந்து 40 பேரை ஏற்றிக்கொண்டு மிர்ஸாபூர் நோக்கி சென்ற படகு, திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 40 பேரும் நீரில் மூழ்கினர். இதில் நீச்சல் தெரிந்த சிலர், தங்களால் இயன்ற அளவு மற்றவர்களை மீட்டனர். மொத்தம் 22 பேர் பத்திரமாக கரையேறினர். மற்றவர்கள் நீரில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, “காணாமல் போன 18 பேரை தேடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீஸார், நீரில் மூழ்கி மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.