இந்தியா

மத்திய அரசின் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு: பிரதமரிடம் ஆதரவு தெரிவித்த சந்திரபாபு

என். மகேஷ்குமார்

தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவமும், போர் விமானங்களும் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே நம் நாட்டில் அனைத்து சுற்றுலா தலங்கள், முக்கிய கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால், மக்கள் கோடை விடுமுறையை வெளி ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்கு பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று காலை விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று மாலை அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தீவிரமாக கண்டித்ததோடு, இதற்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தெலுங்கு தேசம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் 2-ம் தேதி ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT