இஸ்ரோ முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் (84) பெங்களூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 1940-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பிறந்த கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் சிறந்த விஞ்ஞானியாகவும், கல்வியாளராகவும் சூழலியல் ஆர்வலராகவும் விளங்கினார். இஸ்ரோவி்ல் 40 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1994-ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இவர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கடந்த 2020-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் இணைந்து 'தேசிய கல்வி கொள்கையை' உருவாக்கினர். புதிய கல்வி கொள்கையை வடிவமைத்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கையை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியுள்ள கஸ்தூரி ரங்கன் பத்மஸ்ரீ , பத்ம பூஷண் , பத்ம விபூஷண் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த கஸ்தூரி ரங்கன் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை 10.43 மணிக்கு அவரது இல்லத்திலேயே காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கஸ்தூரி ரங்கனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வரும் ஏப்ரல் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.