இந்தியா

பஹல்காம் தாக்குதல் சமயத்தில் கவுதம் கம்பீருக்கு வந்த 2 மிரட்டல் இ-மெயில்கள்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் நாளில் கவுதம் கம்பீருக்கு 2 மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன. இது குறித்த தகவல் இன்று (ஏப்.24) காலை வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியதாகத் தெரிகிறது. அதில், ‘நான் உன்னை கொலை செய்வேன்’ என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. இதே மிரட்டலுடன் கூடிய மெயில் ஒன்று நேற்று காலையிலும். மற்றொன்று மாலையிலும் வந்துள்ளது.

கம்பீருக்கு இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல் வருவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த நவம்பர் 2021-ல் கூட காம்பீர் எம்.பி.யாக இருந்தபோது இதுபோன்ற மின்னஞ்சல் வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT