ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் கூறுகையில், “தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். சுற்றுலா பயணிகளை இந்துக்களா என்று கேட்டு, பிறகு சுட்டுக் கொன்ற விதம், கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் சதி செய்து, பாதுகாப்பற்ற மக்களைத் தாக்கிய விதம், அரசியல் எல்லைகளை கடந்து அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபல் கூறுகையில், “இது நாட்டின் ஒற்றுமை மீதான தாக்குதல் ஆகும். அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, இதனை கண்டிக்க வேண்டும். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களையும் பிடிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்றார்.
நடந்தது என்ன? - ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.