இந்தியா

காஷ்மீரில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்ற முதல்வரின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராம்பன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் செரி, பக்னா, காரி உள்ளிட்ட சுமார் 12 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், காவல் துறையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, அதிகாரிகள் குழு சேதத்தை ஆய்வு செய்து வருகிறது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ அர்ஜுன் சிங் வலியுறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் சுனில் சர்மாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

இந்த சூழ்நிலையில், ராம்பன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பார்வையிட்டார். அப்போது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணப் பணிகள் மெதுவாக நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த சம்பவத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கி வந்த உமர் அப்துல்லா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT