கோப்புப் படம் 
இந்தியா

குறைவான பனிப்பொழிவு காரணமாக கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து நதி படுகைகளில் நீர்வரத்து குறைகிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிப் படுகைகளில் குறைவான பனிப்பொழிவு காரணமாக நீர்வரத்து குறைந்து வருகிறது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட ஒருங்கிணைந்த மலைகள் வளர்ச்சிக்கான சர்வதேச மையம் (ஐசிஐஎம்ஓடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து குஷ் இமயமலை முழுவதும் பனிப்பொழிவு 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இயல்பைவிட 23.6 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதன்மூலம் 12 முக்கிய நதிப் படுகை பகுதியில் வசிக்கும் 200 கோடி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும். தொடர்ந்து 3-வது ஆண்டாக இப்பகுதியில் பனிப்பொழிவு இயல்பைவிட குறைவாக பதிவாகி வருகிறது.

2003 முதல் 2025 வரையிலான 23 ஆண்டுகளாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான பனி பருவத்தில் பனிப்பொழிவு கண்காணிக்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் வருடாந்திர ஏற்ற இறக்கங்களுடன் மீண்டும் மீண்டும் பருவகால பனிப்பொழிவு குறைவாக பதிவானது.

கங்கை நதிப் படுகையில் பனிப்பொழிவு இயல்பைவிட 24.1% குறைவு. இது 23 ஆண்டுகளில் மிகக் குறைவு ஆகும். 2015-ம் ஆண்டில் இயல்பைவிட 30.2% அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.

சிந்து நதிப் படுகையில் பனிப்பொழிவு 2020-ம் ஆண்டில் இயல்பைவிட 19.5% அதிகம் என்ற நிலையிலிருந்து இயல்பைவிட 24.5% குறைவு என்ற நிலையை எட்டியது. கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய நதிகள் அனைத்தும் நீரோட்டத்துக்கு இந்து குஷ் இமயமலையைச் சார்ந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT