‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மண் எழுதிய, ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ நூல் பற்றிய கலந்துரையாடல், டெல்லி இந்தியா இன்டர்நேஷனல் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் உரை யாற்றிய நிர்மலா. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர். 
இந்தியா

இந்து குழுமத் தலைவர் நிர்மலா எழுதிய ‘தி தமில்ஸ்’ நூல் பற்றி கலந்துரையாடல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மண் எழுதிய, ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ (The Tamils: A portrait of a community) நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல அலேப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்தது.

டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ என்ற தலைப்பிலான ஆங்கில நூல் மற்றும் நூலாசிரியர் ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மணை அலேப் நிறுவன பங்குதாரர் டேவிட் தாவேதார் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நூலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து நிர்மலா உரையாற்றினார்.

அப்போது, தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முதல் இன்றைய காலம் வரை சிறந்த கலாச்சாரங்கள் குறித்து நிர்மலா குறிப்பிட்டார். சங்க காலம் முதல் மூவேந்தர்கள், களப்பிரர்கள் மற்றும் சமணர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரம், மராட்டியர் மற்றும் நாயக்கர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் வரலாறும், அந்தந்த கால கட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு பற்றியும், அதில் உடையாமல் முழு வடிவில் கிடைத்த சிறிய அழகான கி.மு. 8-ம் நூற்றாண்டின் பானை பற்றியும் நிர்மலா கூறினார். தஞ்சை பெரு உடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவற்றின் சிறப்புகள் பற்றியும் அவர் விரிவாக விளக்கினார். பின்னர் நடந்த கலந்துரையாடலின் போது, பிரக்ருதி அறக்கட்டளையை சேர்ந்த ரன்வீர் ஷா, நூலின் முக்கிய அம்சங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நூலாசிரியர் நிர்மலா, வரலாற்று அடிப்படையில் பதில்கள் அளித்தார்.

SCROLL FOR NEXT