காப்பீட்டுத் துறை அந்நிய நேரடி முதலீட்டுக்கு வகை செய்யும் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் தற்போது உள்ள 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட தனது முதல் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்ட இந்த காப்பீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மசோதாவை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த மசோதாவை தாக்கல் செய்ய அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இருப்பினும் இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய பாதுகாப்பு மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "காப்பீட்டு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகள் கோரிக்கையை அடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது" என்றார்.
இந்தத் தேர்வுக் குழுவில் சந்தன் மித்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, ஜகத் பிரகாஷ் நட்டா, ஆனந்த் ஷர்மா, பி.கே.ஹரிபிரசாத், ஜே.டி சலீம், சத்தீஷ் சந்திர மிஸ்ரா, கே.சி தியாகி, டெரெக் ஓ.பிரைன், மைத்ரேயன், ராஜீவ் சந்திரசேகர், நரேஷ் குஜ்ரால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.