புதுடெல்லி: பண மோசடி வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரியில் ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ரூ.7.5 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது.
இந்த விவசாய நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா அனுமதி வழங்கினார். இதன்காரணமாக சம்பந்தப்பட்ட இடத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி, அங்கு அடுக்குமாடி குடியிருப்பை கட்டாமல் டிஎல்எப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு நிலத்தை விற்றது. கட்டுமான உரிமத்தையும் டிஎல்எப் நிறுவனத்துக்கு வழங்கியது.
இந்த நில விற்பனையில் பண மோசடி, முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேராவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது பிரியங்கா காந்தியும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்றார். விசாரணை நிறைவடையும்வரை அவர் அங்கேயே காத்திருந்தார். இதைத் தொடர்ந்து ராபர்ட் வதேராவிடம் நேற்று 3-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: குருகிராம் நில விற்பனை மோசடி வழக்கில் கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அப்போதைய காங்கிரஸ் அரசு, ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. வதேராவின் பரிந்துரைப்படி டிஎல்எப் நிறுவனத்துக்கு ஹரியானாவில் பல ஏக்கர் நிலத்தை முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கி உள்ளது. இதன்மூலம் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக டிஎல்எப் ஆதாயம் அடைந்திருக்கிறது.
டிஎல்எப் மற்றும் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பண மோசடி, முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் விரைவில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ராபர்ட் வதேரா நிருபர்களிடம் கூறும்போது, “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக என்னிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன" என்று தெரிவித்தார்.