புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்றார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பினார். இது தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 65 வயதாகும் மெகுல் சோக்ஸி, வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் ஆவார்.
பெல்ஜியத்தில் தற்கால குடியுரிமை: கரீபிய நாடான ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸி, கடந்த 2021-ம் ஆண்டு டொமினிகன் குடியரசு நாட்டுக்கு தப்பினார். அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்கு சென்று அங்கு தஞ்சம் அடைந்தார். அவரது மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்ஸியும் அந்நாட்டில் தற்காலிக குடியுரிமை பெற்றார்.
இதற்கிடையே,மெகுல் சோக்ஸிக்கு எதிராக மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021-ம் ஆண்டில் 2 பிடிவாரன்ட்களை பிறப்பித்தது. அதை சுட்டிக்காட்டி அவரை கைது செய்ய இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் மெகுல் சோக்ஸி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த நாட்டு அதிகாரிகள் அவரை கடந்த12-ம் தேதி கைது செய்துள்ளனர். அவரை பெல்ஜியம் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
ரத்த புற்றுநோயால் பாதிப்பு: பெல்ஜியம் நாட்டில் அவர் கடந்த 6 மாத காலமாக தங்கியுள்ளார். ரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உயர் சிகிச்சைக்காக பெல்ஜியத்தில் இருந்து சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தற்போது அவரை பெல்ஜியம் போலீஸார் தடுப்பு காவல் மையத்தில் வைத்துள்ளனர்.
மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 2024 செப்டம்பர் மாதம் இந்திய அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவரது உடல்நிலை பயணத்துக்கு ஒத்துழைக்காது என்று தெரிவித்தனர். சிகிச்சைக்காக ஆன்டிகுவாவில் இருந்து விமானத்தில் பெல்ஜியம் வந்துள்ளார் எனும்போது, அதேபோல இந்தியாவுக்கும் வரமுடியும். இந்தியாவில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர்கள் அதை ஏற்கவில்லை.
தற்போது பெல்ஜியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெல்ஜியத்தில் இருந்து மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் சிபிஐ அதிகாரிகள் தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளனர். மத்திய வெளியுறவு துறை அதிகாரிகள், பெல்ஜியம் வெளியுறவு துறை அதிகாரிகளுடன் பேசி அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றனர்.
ஜாமீன் பெற முயற்சி: பெல்ஜியம் நீதிமன்றத்தில், ஜாமீன் பெறும் முயற்சியில் மெகுல் சோக்ஸி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, சட்ட ரீதியிலான முயற்சிகளில் இந்திய வெளியுறவு துறை, சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.