இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார் சுமித்ரா மகாஜன்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான காங்கிரஸின் கோரிக்கையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக நிராகரித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தது 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவியலாது என்று அவர் கூறியுள்ளார்.

"மரபு மற்றும் விதிமுறைகளின் படி இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றார் சுமித்ரா மகாஜன். இந்த முடிவை காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் அவர்.

மல்லிகார்ஜுன் கார்கேயிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்குமாறு சோனியா காந்தி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தலைமை வழக்கறிஞர் முகுல் ஏற்கனவே இதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே உள்ளன. விதிமுறைகள் மற்றும் மரபின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்க குறைந்தது 55 இடங்களில் வென்றிருக்க வேண்டும்.

மேலும் 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளிலும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை என்று சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அமைச்சர் பதவிக்கான சலுகைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சுமித்ரா மகாஜனின் இந்த முடிவு குறித்து தன் கட்சித் தலைமையுடன் ஆலோசிப்பதாக கார்கே கூறியுள்ளார்.

சுமித்ரா மகாஜன் நிராகரிப்பதற்கான காரணத்தைக் கூறும்போது, “சபாநாயகர் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சபாநாயகருக்கென்று சிறப்பு வழிகாட்டுநெறிமுறைகள் உள்ளன.

இதில் மாற்றம் வேண்டுமெனில் இதற்காக குழு அமைக்கப்படும். இப்போதைக்கு என்னால் விதிமுறைகளை மட்டுமே கடைபிடிக்க முடியும். இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

SCROLL FOR NEXT