இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தலால் பாதிப்பில்லை: வெங்கைய்ய நாயுடு கருத்து

செய்திப்பிரிவு

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல் படுத்துவதால் மாநில கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு நேற்று வந்தார். அப்போது அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையால் யாருக்கும் எந்த பயமும் அவசியமில்லை. குறிப்பாக மாநில கட்சிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போதுள்ள தகவல் துறையின் அசுர வளர்ச்சியால் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது கஷ்டமாக கூட இருக்காது.

சில கட்சிகளில் இதனை எதிர்ப்பதில் அரசியல் நோக்கம் இருக்கிறதே தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் தேர்தல் செலவுகள் மிகவும் குறையும். ஆட்சி இழப்பதாலும், ஆட்சிக்கு வர முடியாத காரணங்களாலும் சில கட்சிகள் பொறுமை இழந்து நடந்து கொள்கின்றன. மக்கள் கொடுத்த உரிமை. அதனை 5 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்.

கட்சி தாவுதல் என்பது ஜனநாயக முறைக்கு எதிரானது. கட்சி தாவும் அரசியல் வாதிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து இதர கட்சியில் இணைய வேண்டும். இவ்வாறு வெங்கைய்ய நாயுடு பேசினார்.

SCROLL FOR NEXT