புதுடெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் ரோபோ, ட்ரோன்கள் உதவியுடன் இந்திய ராணுவம் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 28-ம் தேதி மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 5,350 பேர் உயிரிழந்துள்ளனர். 8,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் உதவி செய்து வருகிறது. சரக்கு விமானங்கள், சரக்கு கப்பல்கள் மூலம் ஏராளமான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இந்திய ராணுவத்தின் சார்பில் மியான்மரில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு, படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இந்திய ராணுவ மருத்துவர்கள் உட்பட 118 பேர் பணியாற்றி வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் இந்திய ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணியில் ரோபோ நாய்கள் மற்றும் மிகச் சிறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மூலம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிவாரண பொருட்கள்: இந்த மருத்துவமனையில் இதுவரை 1,500 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அரிசி, கோதுமை உட்பட 656 டன் நிவாரண பொருட்கள் மியான்மர் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்க ரோபோ நாய்கள், மிகச் சிறிய ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறோம். தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இறுதிவரை மீட்புப் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.