புதிய ரயில்வே திட்டங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நான்கு மல்டி டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்தும், வசதியை அதிகரிக்கும், தளவாட செலவுகளை குறைக்கும் என்பதுடன் விநியோகச் சங்கிகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரூ.16,658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் இந்த நான்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்திய ரயில்வே நெட்வொர்க் தற்போதைய நிலையிலிருந்து கூடுதலாக 1,247 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும்.
துடிப்பான கிராமங்கள் திட்டம்-II க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது எல்லையோர கிராமங்களில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான " விதிவிலக்கான செய்தி" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
செழிப்பான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதிப்படுத்துவதற்கும், எல்லை தாண்டிய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், எல்லைக்குட்பட்ட மக்களை தேசத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் துடிப்பான கிராம் திட்டம் உதவுகிறது. மொத்தம் ரூ.6,829 கோடி செலவில் அஸ்ஸாம், பிஹார், குஜராத், ஜம்மு-காஷ்மீர் , நாகாலாந்து, பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய கிராமங்களில் இந்த திட்டம் 2028-29 வரை செயல்படுத்தப்பட உள்ளது.