வினய் சோமையா 
இந்தியா

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி தற்கொலை: காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் குடகு அருகே பாஜக நிர்வாகி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காங்கிரஸை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியின் நகர இளைஞர் பிரிவு தலைவராக இருந்தவர் வினய் சோமையா (39). இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில்,''கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவில் குடகு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணாவை விமர்சித்து பதிவிட்டேன். இதற்காக போலீஸார் என்னை கைது செய்து, அவமானப்படுத்தினர். இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளேன்''என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர் நேற்று குஷால் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வினய் சோமையாவின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில், வினய் சோமையாவின் மரணத்துக்கு காரணமான குடகு காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் தன்ஹீரா மைனா, மந்த்ரே கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததாக அறிவித்த‌னர். இதையடுத்து பாஜகவினர் ஊர்வலமாக சென்று வினய் சோமையாவின் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT