இந்தியா

வீடு இடிப்பின்போது கையில் புத்தகத்துடன் ஓடிய உ.பி சிறுமியின் கல்விக்கு நிதியுதவி: அகிலேஷ் உறுதி

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது தனது புத்தகத்தை பத்திரப்படுத்திக் கொண்டு ஓடியச் சிறுமியின் கல்விக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குபவர்கள் உண்மையில் வீடற்றவர்களே! தனது புத்தகத்தை காப்பாற்றி ஓடிய அந்தச் சிறுமியின் கல்விக்கு உதவுவோம் என நாங்கள் உறுதி எடுக்கிறோம். படிப்பவர்களால் மட்டுமே கல்வியின் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். புல்டோசர் என்பது அழிவு சக்தியின் சின்னம்; அறிவு, புரிதல் மற்றும் ஞானத்தின் சின்னமில்லை. ஒரு புல்டோசர் ஆணவம் என்ற எரிபொருளால் இயக்கப்படுகிறது. பெருமையின் சக்கரங்கள் மீதேறி நகர்கிறது. அதில் நீதியின் கடிவாளம் இருப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரின் அராய் கிராமத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக மாநில அரசின் குற்றச்சாட்டின் பேரில், அவற்றை இடிக்க மார்ச் மாதம் 21-ம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமி தனது வீட்டை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வீடு இடிப்புச் சம்பவத்தின்போது ஒரு குடிசைக்கு அருகில் இருந்த கொட்டகை தீப்பற்றியதை தொடர்ந்து, அனன்யா தனது தாயிடம் இருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டு குடிசைக்குள் ஓடினாள். பிறகு இந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதப் புத்தகங்களை கொண்ட ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அனன்யா யாதவ் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கிறார். அனன்யா கூறுகையில், “எனது புத்தகங்களும் பையும் எரிந்துவிடுமோ என்று பயந்தேன். உடனே ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு என் அம்மாவிடம் திரும்பினேன்” என்றார். எதிர்காலத்தில் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது அனன்யாவின் விருப்பம்.

உச்ச நீதிமன்றத்தின் கவனம் ஈர்த்த அனன்யா: குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்து வந்த சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்தார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு புதன்கிழமை ஒரு வழக்கு விசாரணையில் இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தது.

இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், “சமீபத்தில் புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.

மேலும் நீதிபதிகள் அமர்வு, அரசியல் சாசனம் மக்களுக்கு தங்குமிடம் வழங்கும் உரிமையை அதிகாரிகளுக்கு நினைவூட்டி, வீடு இடிப்புகளின் தன்மை பற்றி பதில் அளிக்கவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் கேட்டுக்கொண்டது.

SCROLL FOR NEXT