இந்தியா

மேற்​கு​வங்​கத்​தில் 25,753 ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனம் செல்லாது: உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதுவரை பெற்ற சம்பளத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை, மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம் என உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உச்ச நீதிமன்றம் சில மாற்றங்களை செய்துள்ளது.

மேற்குவங்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலில் மேற்குவங்க முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, திரிணமூல் எம்எல்ஏ.க்கள் மானிக் பட்டாச்சார்யா, ஜிபன் கிருஷ்ண சாகா ஆகியோர் சிக்கினர்.

இந்த நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 22-ம் ரத்து செய்தது. ஆசிரியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, சிபிஐ விசாரணை ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன் விசாரணை கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கியது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் கூறியதாவது: ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து, 3 மாதத்துக்குள் மீண்டும் தேர்வு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள், மோசடிகள் மிகப் பெரியளவில் நடைபெற்றுள்ளன. இந்த தேர்வு முறையில் நம்பகத்தன்மை நீர்த்துபோய் விட்டது. உயர்நீதிமன்ற உத்தரவில் சில மாற்றங்களை மட்டும் செய்கிறோம். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம். மாநில அரசு 3 மாதத்துக்குள் ஆசிரியர்களை புதிதாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

உத்தரவை பின்பற்றுவோம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘ நாட்டின் குடிமகனாக நான் எனது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது நான் உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன். மனிதாபிமான நோக்கில் என்னால் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் தேர்வாணையம் தன்னிச்சையான அமைப்பு. அதன் பணியில் அரசு தலையிடாது. நீதிமன்றம் 3 மாத கெடு விதித்துள்ளதால், அதை நாம் ஏற்று புதிதாக ஆசிரியர்களை தேர்வு செய்வோம்’’ என்றார்.

மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து மேற்கு வங்க பாஜக தலைவரும், மத்திய கல்வித்துறை இணையமைச்சருமான சுகந்தா மஜூம்தார் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமினத்தில் ஊழலை தடுக்கத் தவறிய முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா அரசின் ஊழலால் தகுதியான ஆசிரியர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் யார்? முறைகேடாக வேலையில் சேர்ந்தவர்கள் யார் என்பதை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து மம்தா பானர்ஜி அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT