இந்தியா

பிரயாக்ராஜில் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தவர்களின் வீட்டை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி அதிக் அகமது சொந்தமான இடம் பிரயாக்ராஜில் இருந்தது. அந்த இடத்தை தவறாக கண்டுபிடித்த மாவட்ட நிர்வாகம், அங்கு வீடுகட்டியிருந்த வழக்கறிஞர் ஜுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உட்பட 5 பேருக்கு தங்கள் வீடுகளை காலி செய்யும்படி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியது. மறுநாளே அந்த வீடுகள் இடிக்கப்பட்டன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஏஎஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவுடி அதிக் அகமதுவின் இடம் தவறாக அடையாளம் காணப்பட்டு அங்குள்ள வீடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர். இந்த நோட்டீஸ் முதல்நாள் இரவுதான் வீடுகளில் ஒட்டப்பட்டது என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்குகள் மனசாட்சியை அதிரச் செய்கிறது. மனுதாரர்களின் வீடுகள் அராஜக முறையில் இடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தங்கியிருப்பதற்கான உரிமை அரசியல் சாசனத்தில் உள்ளது என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். வீடுகள் இடிக்கப்பட்ட விதம் உணர்வற்ற தன்மையை காட்டுகிறது. இந்திய வீடுகளை இடிப்பதற்காக நோட்டீஸ் பதிவு தபால் மூலம் ஏன் அனுப்பப்படவில்லை. வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் வேலையை நிறுத்த வேண்டும். உத்தர பிரதேம் அம்பேத்கர் நகரில் இடிக்கப்பட்ட வீட்டின் அருகே ஒரு சிறுமி புத்தகங்களுடன் நிற்கிறார். வைரலாக பரவிய இந்த வீடியோ காட்சியை பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது. வீடுகளை இடித்ததற்கு இழப்பீடாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

SCROLL FOR NEXT