ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி தனது பிரசாரத்தை நிர்வகிக்க ஐ.ஐ.டி.யில் படித்த இருவரை அமர்த்தி இருக்கிறார்.
பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மிசா பாரதி, டாக்டர்கள் உள்ளிட்ட பிற துறை வல்லுநர்களையும் மாநிலம் முழுவதும் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். மிசா பாரதியின் கணவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர். அவரும் தனது மனைவிக்கு ஆதர வாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
வாக்காளர்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக அணுகி ஆதரவு திரட்ட பங்கஜ் சுதன், பர்வீண் தியாகி ஆகிய இரு ஐஐடி பட்டதாரிகளை பணியில் இறக்கி இருக்கிறார் மிசா பாரதி. குர்காவ்னில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் சுதன்.
டெல்லியில் தனியாக தொழில்நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் தியாகி.சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்களையும் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டுவதற்கான முக்கிய யோசனைகளை இருவரும் வழங்கி வருவதாக மிசா பாரதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இருவரின் முயற்சி காரணமாக மிசா பாரதியின் முகநூலுக்கு பாட்னாவில் ஏராளமான இளைஞர் களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
மிசா பாரதி தன்னுடன் கல்லூரியில் படித்த டாக்டர் நண்பர்கள் இருவரையும் பிரசாரத்துக்கு ஈடுபடுத்தியுள்ளார். அவர்களில் நியூயார்க்கில் உள்ள டாக்டரான ஜமீல் அக்தர், பிரசாரக் கூட்டத்தில் பேசுவதற்கான உரையையும் குஜராத்தில் உள்ள ஆசாத் குமார் என்பவர் ஊரக வாக்காளர்களை புரிந்து கொள்ளவும் உதவுகின்றனர்.