தற்கொலை மிரட்டல் அல்லது முயற்சியை விவாகரத்துக்கான காரணமாக கூறுவதை ஏற்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மகாராஷ்டிர குடும்ப நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், “தற்கொலை செய்து கொள்வதன் மூலம் என்னையும் எனது குடும்பத்தினரையும் சிறையில் அடைக்கப் போவதாக எனது மனைவி மிரட்டுகிறார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் இது கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும்” என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட குடும்ப நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது.
இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் அமர்வில் மனைவி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.ஜோஷி குடும்ப நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கொடுமைப் படுத்தப்பட்டதற்காக கணவரின் வாதம்
அவராலும் பிற சாட்சிகளின் சாட்சியங்கள் மூலமும் குடும்ப நீதிமன்றத்தில் போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறையில் அடைக்கப் போவதாக மிரட்டுவது மட்டுமின்றி ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றதாக மனைவி மீது கணவர் குற்றம் சாட்டுகிறார்.
வாழ்க்கைத் துணையின் இத்தகைய செயல் மிகவும் கொடுமையானது, அது விவாகரத்துக்கான காரணமாக அமையும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். இத்தம்பத்திக்கு கடந்த 2009 ஏப்ரலில் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.