வங்கதேச தேசிய தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரித்துள்ளார். இதுதொடர்பாக வங்கதேச நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
வங்கதேச நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வங்கதேச தினத்தை முன்னிட்டு, உங்களுக்கும், வங்கதேச மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவுக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கான பணிகளில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபடும்.
பரஸ்பர உணர்திறனின் அடிப்படையில் இந்த உறவு கட்டமைக்கப்பட வேண்டும். வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.
வங்கதேச நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போரின் உணர்வு, நமது உறவுக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பாங்காக்கில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.