சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்ஜி லால் சுமன் வீடு மீது கர்னி சேனா தொண்டர்கள் நடத்திய தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர்.
சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன். இவர் உ.பி.யின் மேவர் பகுதியை ஆண்ட ராஜ்புத் ஆட்சியாளர் ராணா சங்கா பற்றி விமர்சித்திருந்தார். ‘இப்ராகிம் லோடியை வீழத்துவதற்காக பாபரை அழைத்து வந்த ராணா சங்கா ஒரு துரோகி’ என கூறியிருந்தார். இது ராஜ்புத் பிரிவைச் சேர்ந்த கர்னி சேனா அமைப்பினரை கோபம் அடையச் செய்தது.
அவர்கள் ஆக்ராவில் உள்ள எம்.பி. லால் சுமன் வீடு மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி பொருட்களையும், வீட்டுக்கு வெளியே நின்ற வாகனங்களையும் சேதப்படுத்தினர். முகலாயர்களை வீழத்திய மன்னர் ராணா சங்காவை அவமதிப்பு செய்ததற்காக எம்.பி. ராம்ஜி லால் சுமன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்னி சேனா அமைப்பின் தலைவர் சூரஜ் பால் சிங் அபு கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 267-விதியின் கீழ் விவாதிக்க 7 நோட்டீஸ்களை பெற்றுள்ளதாக தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இவற்றை ஏற்க முடியாது என்றார். இப்பிரச்சினையை உறுப்பினர்கள் பூஜ்ய நேரத்தில் எழுப்பலாம் என்றார்.
பூஜ்ய நேரம் தொடங்கியதும், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று, கோஷமிட்டனர். அப்போது ராணா சங்கா வாழ்க என பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது பேச முயன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் சமாஜ்வாதி, காங்கிரஸ், திரிணமூல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தனர்.