அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்ஜின் விநியோகத்தை தொடங்கியுள்ளதால், எச்ஏஎல் நிறுவனத்தின் தேஜஸ் -1ஏ போர் விமான தயாரிப்பு வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேஜஸ் மார்க்-1ஏ போர் விமான தயாரிப்புக்காக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,375 கோடி மதிப்பில், 99 எப்-404 ரக இன்ஜின்கள் வாங்க எச்ஏஎல் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், இந்த இன்ஜின்களை விநியோகிப்பதில் அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இதனால் தேஜஸ் போர் விமான தயாரிப்பில் மந்த நிலை ஏற்பட்டது.
இது குறித்து இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 40 போர் விமானங்களை படையில் சேர்த்தால்தான், போருக்கு தயார் நிலையில் இருக்க முடியும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு முதல் இன்ஜினை விநியோகித்துள்ளதாக ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து ஆண்டுக்கு 20 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க முடியும் என எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 40 தேஜஸ் மார்க்-1 ரக போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்க இந்திய விமானப்படை ரூ.8,802 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுத்திருந்தது. இவற்றில் இதுவரை 38 விமானங்கள் மட்டும் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு 83 தேஜஸ் மார்க்-1ஏ ரக விமானங்கள் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திடம் ரூ.46,898 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில் முதல் விமானம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் 97 தேஜஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களை ரூ.67,000 கோடிக்கும் வாங்கும் திட்டமும் விமானப்படையிடம் உள்ளது.
அதன்பின் ஜிஇ எப்-114 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட 108 தேஜஸ் மார்க்-2 ரக விமானங்களை எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் திட்டமும் உள்ளது. இந்த இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க ஜிஇ நிறுவனத்திடம் எச்ஏஎல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய விமானப்படையில் தற்போது 30 போர்விமானப் படைப்பிரிவுகள் உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க விமானப்படைக்கு 42 போர் விமான படைப்பிரிவுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.