இந்தியா

59-வது ஞானபீட விருதுக்கு சத்தீஸ்கர் எழுத்தாளர் வினோத் குமார் தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த இந்தி எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா, 59-வது ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 59-வது ஞான பீட விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய பாரதிய ஞானபீட ஆய்வு அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஞான பீட விருது பெற்ற பிரதிபா ரே தலைமை வகித்தார். பல்வேறு மொழிகளை சேர்ந்த 8 அறிஞர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடத்தப்பட்ட நீண்ட ஆய்வுக்குப் பிறகு சத்தீஸ்கரை சேர்ந்த இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா (88) தேர்வு செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெறும் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

கடந்த 1937-ம் ஆண்டு சத்தீஸ்கரின் ராஜ்நந்தகாவுன் நகரில் வினோத் குமார் சுக்லா பிறந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியில் பல்வேறு கதைகள், கவிதைகளை எழுதி வருகிறார். இவரது சில நாவல்களை தழுவி பாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளை வினோத்குமார் பெற்றுள்ளார். தற்போது அவர் நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய் உட்பட பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர் வினோத்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT