மீரட்: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் மஸ்கன் ரஸ்தோகி. இருவரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்துள்ளனர். 13 வயது முதலே இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
12-ம் வகுப்புக்கு பிறகு சரக்கு கப்பல் சார்ந்த படிப்பை நிறைவு செய்த சவுரப், லண்டனை சேர்ந்த பிரபல சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதன்பிறகு சவுரப் ராஜ்புத்தும் மஸ்கன் ரஸ்தோகியும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்து மீரட் திரும்பிய சவுரப் திடீரென காணாமல் போனார். அவரும் மஸ்கன் ரஸ்தோகியும் ரகசிய இடத்தில் வாழ்ந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீரட் போலீஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். இதேபோல அடுத்தடுத்து 2 முறை சவுரபும், மஸ்கனும் காணாமல் போயினர். கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த சவுரபின் குடும்பத்தினர், ஏழை பெண்ணான மஸ்கனை ஏற்கவில்லை. சவுரபின் வற்புறுத்தலால் குடும்பத்தினர் ரகசிய திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். சுமார் 6 மாதங்கள் சவுரபின் வீட்டில் மஸ்கன் வாழ்ந்தார். அதன்பிறகு சவுரபும் மஸ்கனும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 6 வயதாகிறது. சரக்கு கப்பல் பணி காரணமாக சவுரவ் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம்.
மீரட்டில் தனியாக வாழ்ந்த மஸ்கன் ரஸ்தோகிக்கும் அதே பகுதியில் ஆடிட்டராக பணியாற்றிய ஷாகில் சுக்லாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல வாழத் தொடங்கினர். இருவரின் உறவு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சவுரபுக்கு தெரியவந்தது. அப்போது மஸ்கனை விவாகரத்து செய்ய அவர் முடிவு செய்தார்.
ஆனால் சவுரபை சமாதானம் செய்த மஸ்கன், “தனிமையில் வாழ்ந்ததால் தவறு செய்துவிட்டேன். இனிமேல் ஷாகில் சுக்லாவை சந்திக்க மாட்டேன். மகளுக்காக நாம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்" என்று கூறினார். மனைவின் வாக்குறுதிக்கு பிறகு விவகாரத்து முடிவை சவுரவ் கைவிட்டார். மனைவி, மகளின் செலவுக்காக அவர் மாதந்தோறும் ரூ.1 லட்சத்தை அனுப்பி வந்தார்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மஸ்கனின் பிறந்த நாள். அதே மாதம் 28-ம் தேதி மகள் பிகுவின் பிறந்த நாள். மனைவி, மகளின் பிறந்த நாளை கொண்டாட சவுரப் ராஜ்புத் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி லண்டனில் இருந்து மீரட் திரும்பினார். மனைவி, மகளின் பிறந்த நாளை அவர் அடுத்தடுத்து பிரம்மாண்டாக கொண்டாடினார்.
கடந்த 4-ம் தேதி இரவு சவுரப் ராஜ்புத்தை, மஸ்கனும் அவரது காதலர் ஷாகில் சுக்லாவும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். சவுரபின் உடலை டிரம்பில் வைத்து சிமென்ட் வைத்து பூசினர். பின்னர் மஸ்கனும், ஷாகிலும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு இன்ப சுற்றுலா சென்றுவிட்டனர். கடந்த 17-ம் தேதி இருவரும் மீரட் திரும்பினர்.
இதனிடையே மீரட் நகரில் பிரம்மபுரி பகுதியில் உள்ள மஸ்கனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றபோது ட்ரம்பில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சவுரவ் ராஜ்புத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 18-ம் தேதி மஸ்கன், அவரது காதலர் ஷாகில் சுக்லா கைது செய்யப்பட்டனர்.
கணவரை கொலை செய்தது தொடர்பாக மஸ்கன் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு பிறகு ஷாகில் சுக்லாவுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களது காதல் வாழ்க்கைக்கு சவுரவ் ராஜ்புத் இடையூறாக இருந்தார். ஒருகட்டத்தில் என்னை விவகாரத்து செய்யவும் முடிவு செய்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த பிப்ரவரியில் கணவர் சவுரப், மீரட் வருவதற்கு முன்பாகவே இறைச்சி வெட்டும் கத்திகளை 800 ரூபாய்க்கு வாங்கினேன். ரூ.300-க்கு பாலித்தீன் பைகள், ரூ.1,400-க்கு ட்ரம் வாங்கினேன். ஒரு மூட்டை சிமென்ட் மற்றும் மணலையும் வாங்கி வைத்தேன். மருந்து கடையில் தூக்க மாத்திரைகள், மயக்க மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்திருந்தேன். எனது பிறந்தநாள், மகளின் பிறந்தநாளில் சவுரப் உற்சாகமாக கொண்டாடினார். அவரோடு சேர்ந்து நானும் உற்சாகமாக இருப்பது போன்று நடித்தேன். கடந்த 4-ம் தேதி மதுபானத்தில் தூக்க மாத்திரை கலந்தேன். அந்த மதுபானத்தை சவுரபுக்கு கொடுத்தேன். அவர் குடிக்கவில்லை. இதன்பிறகு இரவு உணவில் தூக்க மாத்திரை, மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். இதை சாப்பிட்ட சவுரப் மயக்க நிலைக்கு சென்றார்.
அதன்பிறகு ஷாகிலை வீட்டுக்கு வரவழைத்தேன். நானும் ஷாகிலும் சேர்ந்து கத்தியால் சவுரபின் இதயத்தில் குத்தி கொலை செய்தோம். பின்னர் உடலை 15 துண்டுகளாக அறுத்து பாலித்தீன் பைகளில் நிரப்பி ட்ரம்பில் அடைத்தோம். அந்த ட்ரம்பை சிமென்ட் கலவையால் பூசினோம்.
கடந்த 5-ம் தேதி மகளை, எனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு ஷாகிலுடன் சிம்லாவுக்கு இன்ப சுற்றுலா சென்றுவிட்டேன். இவ்வாறு மஸ்கன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மீரட் போலீஸார் கூறியதாவது: மஸ்கனுக்கும் ஷாகிலும் போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. மாதந்தோறும் சவுரப் அனுப்பிய பணத்தில் இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். கடைசியாக ரூ.1 லட்சத்தை மனைவியிடம் சவுரப் வழங்கியுள்ளார். அந்த பணத்தில்தான் மஸ்கனும் ஷாகிலும் தற்போது சிம்லாவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். பணம் தீர்ந்த பிறகு மீரட் திரும்பி உள்ளனர். இருவரும் சேர்ந்து சவுரபின் கை, கால்கள், தலையை மிகவும் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். மஸ்கனுக்கு மரண தண்டனை விதிக்க அவரை பெற்ற தாய், தந்தையே கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மீரட் போலீஸார் தெரிவித்தனர்.