இந்தியா

நக்சலைட் அபாயம் இல்லாத கிராமங்களுக்கு சத்தீஸ்கர் அரசு சலுகை

செய்திப்பிரிவு

நக்சலைட் அபாயம் இல்லாத கிராமங்களுக்கு செல்போன் நெட்வொர்க், மின்சாரம் மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சல் அபாயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பஸ்தார் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தாண்டில் இதுவரை 113 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 104 பேர் கைது செய்யப்பட்டனர், 164 பேர் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அபாயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நக்சல் அபாயம் இல்லாத கிராமங்களில் செல்போன் நெட்வொர்க், மின்சார இணைப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் நக்சலைட்டுகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நிலம் மற்றும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் நக்சலைட்டுகளுக்கு புதிய கொள்கை திட்டம் அமல்படுத்தப்படும். அதில் நிதியுதவி, நிலம் உட்பட பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது நக்சலைட்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழிவகுக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT