பில்லி ராஜு 
இந்தியா

2 குழந்தைகளை கால்வாயில் தள்ளிவிட்டு தந்தை தற்கொலை: நீச்சல் தெரிந்ததால் உயிர் பிழைத்த மகன்

என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் நெலபர்த்திபாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கஜபதி நகரில் பில்லி ராஜு என்பவர் பைனானஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி விஜயா, மகன் ராம் சந்தீப் (10) மற்றும் காருண்யா என்ற 7 வயது மகளும் இருந்தனர்.

ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தீப் 4-ம் வகுப்பும், காருண்யா 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜு வழக்கம் போல் குழந்தைகளை வென்டூரில் உள்ள தனது வீட்டிலிருந்து ராமச்சந்திரபுரம் பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றார். திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும்போது குழந்தைகளை கால்வாயில் தள்ளிவிட்டு ராஜுவும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மகன் சந்தீப் நீந்தி கரையை அடைந்து அழுது கொண்டு இருப்பதை கிராமத்தினர் பார்த்துள்ளனர். அவர்களிடம் சந்தீப் நடந்ததை கூறியுள்ளார்.

இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணியளவில் காருண்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ராஜுவை தேடும் பணி நடைபெற்று வருவதாக இன்ஸ்பெக்டர் வெங்கடநாராயணா தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ராஜு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT