மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டி டிஜிட்டல் கைது முறைகேடு மூலம் ரூ.20 கோடியை இழந்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் காவல் துறை அதிகாரி என கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது, அந்த மூதாட்டியின் ஆதார் எண் சட்டவிரோத செயல்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மூதாட்டியின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, சட்டவிரோத செயல்களுக்காக அதில் இருந்து அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக செல்போனில் பேசியவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மூதாட்டி மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டி உள்ளார். டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதுபற்றி வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
நீதிமன்ற வழக்கை தவிர்க்க வேண்டுமானால், நான் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதே நம்பிய அந்த மூதாட்டி, காவல் துறை அதிகாரி என பேசியவர் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20.25 கோடியை அனுப்பி உள்ளார். கடந்த டிசம்பர் 26 முதல் மார்ச் 3-ம் தேதி வரை இந்த மோசடி நடந்துள்ளது. தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே இருந்ததால், மோசடி பேர்வழிகளின் ஊழலாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அந்த மூதாட்டி காவல் துறையில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர். எந்தெந்த வங்கிக் கணக்குக்கு பணம் சென்றுள்ளது என்பதை கண்டுபிடித்து, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.