இந்தியா

கேரளாவில் காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கம்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரையில் மறைந்த காந்தியவாதி பி.கோபிநாதன் நாயரின் சிலையை காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

விழாவில் அவர் தனது உரையில், நாட்டின் ஆன்மாவை புற்றுநோய் முடக்கியுள்ளதாகவும் அந்த நோயை சங் பரிவார் (ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகள்) பரப்புவதாகவும் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நிகழ்ச்சியில் இறுதியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அங்கு வந்து துஷார் காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இவர்கள் துஷார் காந்தியின் காரை வழிமறித்ததால் பதற்றம் உருவானது.

இதுகுறித்து துஷார் காந்தி கூறுகையில், “அவர்கள் எனது காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனவே இது தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை" என்றார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT