கடந்த 13 ஆண்டுகளாக, மணிப்பூரில் நடக்கும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளாவை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் அம்மாநில அரசுக்குச் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு வழக்கறிஞர் கூறுகையில், “ஐரோம் ஷர்மிளா தான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறியதாக புகார் மட்டுமே எழுப்பப்பட்டது, அவ்வாறு அவர் கூறியதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை, எனவே அவரை உடனடியாக விடுவிக்கவேண்டும்”, என்று தெரிவித்தார்.
ஆயினும், இந்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் வரவில்லை.
ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தின் பின்னணி
'இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷர்மிளா, 2000ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
நவம்பர் 1ஆம் தேதி அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப்படையினர் அப்பாவி மக்கள் 10 பேரைச் சுட்டுக் கொன்றதாக எழுந்த செய்திகளை அடுத்து ராணுவப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அவர் போராடி வந்தார்.
இந்நிலையில் அவர் உண்ணா விரதப் போராட்டத்தை தற்கொலை முயற்சி என்று கூறி மாநில அரசினால் சிறையில் தள்ளப்பட்டார். இந்த வழக்கில்தான் தற்போது நீதிமன்றம் அவரை விடுவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.