இந்தியா

பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான போலீஸ் ஏஎஸ்ஐ!

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்டம் மாடதி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமாரு காட்தி (30). நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டமானது மிகவும் பின்தங்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதியிலிருந்து படித்து பட்டதாரியான சோமாரு காட்தி, 10 வருடங்களுக்கு முன்பு காவல் துறையில் இணைந்தார். உதவி சப் இன்ஸ்பெக்டராக(ஏஎஸ்ஐ) பதவி உயர்வு பெற்றார். பின்னர் தனது ஏஎஸ்ஐ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அவர். இதுகுறித்து சோமாரு காட்தி கூறியதாவது.

நான் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பலரின் உதவியால்தான் நான் படித்து பட்டம் பெற்றேன். அப்போது தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் சேர்ந்தேன். ஆனால், இன்னும் இப்பகுதி மக்கள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர் என்று எண்ணும் போது எனக்குக் கவலை ஏற்பட்டது. என்னைப் போன்று படிக்க முடியாமல் ஏராளமான மக்கள் உள்ளனர். எனக்கு பலர் உதவி செய்தது போலவே ஏழை மக்களுக்கு நான் உதவி செய்ய முடிவு செய்தேன். அதனால்தான் ஏஎஸ்ஐ பதவியை உதறிவிட்டு, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தற்போது 24 கிராம பஞ்சாயத்துகளிலும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன்.

என்னுடைய உறவினர் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் என்கவுன்ட்டரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். நக்சல் இயக்கமே இருக்கக்கூடாது. மாணவர்கள் கல்விப்பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT