இந்தியா

உலகில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள்

செய்திப்பிரிவு

உலகில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூ ஏர், உலக காற்று தர அறிக்கையை (2024) வெளியிட்டுள்ளது. இதன்படி உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த 2023-ல் சராசரியாக, காற்று மாசு குறியீடான பிஎம்2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோ கிராமாக இருந்தது. இது 2024-ல் 91.6 ஆக உள்ளது.

பிர்னிஹட் (அசாம்), டெல்லி, முல்லன்பூர் (பஞ்சாப்), பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகிய 13 இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இதுபோல உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த நாடுகள் பட்டியலில், கடந்த 2023-ல் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவில் 2023-ல் பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோ கிராமாக இருந்தது. இது 2024-ல் 7% குறைந்து 50.6 ஆக உள்ளது.

இந்தியாவில் காற்று மாசு காரணமாக உடல்நல கோளாறுகள் அதிகரித்து சராசரி வாழ்நாள் குறைந்து வருகிறது. கடந்த 2009 முதல் 2019 வரையிலான 10 ஆண்டில், காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என லான்செட் பிளானெட்ரி ஆய்வு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT