பெங்களூரு: துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கக் கடத்தி வந்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணையின்போது வசைபாடி துன்புறுத்தியதாக சிறப்பு நீதிமன்றத்தில் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த வழக்கில் அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது அவரை துன்புறுத்தவில்லை என விசாரணை அதிகாரி தெரிவித்தார். “நாங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் பதில் தர மறுக்கிறார். ஒவ்வொரு முறையும் மவுனமாகவே இருக்கிறார். மொத்த விசாரணையையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம்” என நீதிமன்றத்தில் அந்த அதிகாரி கூறினார்.
நீதிமன்றத்துக்கு வந்த அவரிடம் ‘என்ன சொல்ல வேண்டும்’ என்பதை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவரும் அதைத்தான் சொல்கிறார். அவரிடம் ஆதாரங்களை காட்டி கேட்டாலும் மவுனம் தான் பதிலாக உள்ளது என விசாரணை அதிகாரி கூறினார். இது தொடர்பாக ரன்யா ராவின் வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
ரன்யா ராவ் குற்றச்சாட்டு: “விசாரணையில் அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால், ‘நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியும்’ என சொல்லி மிரட்டுகிறார்கள். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டி தீர்க்கின்றனர். இது கடும் மன உளைச்சலை தருகிறது. சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன். மற்றபடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்” என அழுதபடி ரன்யா ராவ் கூறினார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். விசாரணை முழுவதுக்குமான சிசிடிவி பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் அதை பார்க்கலாம். குற்றவாளியை விசாரணையின்போது கேள்வி கேட்பது துன்புறுத்தல் அல்ல என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உங்களுக்கு வழக்கறிஞர்கள் உடன் பேச 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அத்தகைய சூழலில் இது குறித்து ஏன் நீங்கள் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நீங்கள் மனு தாக்கல் செய்திருக்கலாம் என நீதிபதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ரன்யா ராவ் தரப்பு வழக்கறிஞரிடம் ‘ஏன் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள்’ என நீதிபதி கடிந்து கொண்டார்.
முடிவாக வரும் மார்ச் 24-ம் தேதி வரையில் அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்கு எதிராக ஆட்சேபனை இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
பின்னணி என்ன? - கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.