இந்தியா

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்த தந்தை, மகன், மகள் உயிரிழப்பு

என்.மகேஷ்குமார்

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன், மகள் என 3 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், மேச்சராஜுபல்லி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (33). இவர், தனது மனைவி கிருஷ்ணவேணி, மகள் சைத்ரசாய் (5), மகன் ஆர்யவர்த்தன் (2) ஆகியோருடன் காரில் ஹனுமகொண்டாவில் நடந்த உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பிறகு காரில் சொந்த ஊருக்கு நேற்று திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, காரை ஓட்டி வந்த பிரவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் காரை திருப்பி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். எனினும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதில், கார் சாலையின் ஓரத்தில் இருந்த எஸ்ஆர்எஸ்பி கால்வாயில் விழுந்தது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கால்வாயில் குதித்து கிருஷ்ணவேணி, ஆர்யவர்த்தன் ஆகிய இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர். இதற்குள் சிறுவன் ஆர்யவர்த்தன் மூச்சுத்திணறி உயிரிழந்தான்.

கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து பிரவீன் அவரது மகளை போலீஸார் தேடி வந்தனர். பிறகு இவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT