மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி பகுதியில் தற்போது அதானி குழுமம் மேற்கொண்டு வரும் வரும் மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க உச்சீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
மும்பையில் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டதுக்கான ரூ.5,069 கோடி டெண்டரை 2022-ம் ஆண்டு அதானி குழுமத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய அரபு எமிரேட்டைச் (யுஏஇ) சேர்ந்த செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் செக்லிங்க் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதானி குழுமத்துக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, செக்லிங் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பிவி சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவு நியாயமானது என்பதை நீதிபதிகள் வாய்மொழியாக குறிப்பிட்டனர். ஏனெனில், ரயில் பாதையும் உருவாக்கப்பட்டு இந்த திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது என்றனர்.
சில ரயில்வே குடியிருப்புகள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டு திட்டப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது. இருப்பினும், இந்த திட்டம் தொடர்பான அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் எஸ்க்ரோ அக்கவுண்ட் எனப்படும் ஒரே நிதித் தொகுப்பில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மகாராஷ்டிர அரசு மற்றும் அதானி பிராப்பர்ட்டீஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.