குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் லிம்பாய் பகுதியில் சிறுவனை மடக்கி விசாரிக்கும் போலீஸ் எஸ்.ஐ. காத்வி. 
இந்தியா

பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டிய சிறுவனைத் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்

செய்திப்பிரிவு

பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டிய சிறுவனைத் தாக்கியதாக போலீஸ் எஸ்ஐ ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் லிம்பாயத் பகுதியைச் சேர்ந்தவர் பி.எல். காத்வி. சப்-இன்ஸ்பெக்டரான இவர் சூரத்தின் லிம்பாயத் பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே, லிம்பாயத் பகுதியில் பிரதமர் மோடி நேற்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது அந்த சாலையில் சைக்கிளை ஒரு சிறுவன் ஓட்டிக் கொண்டு வந்தான். இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி காத்வி, சிறுவனைத் தடுத்து நிறுத்தி அவனை அடித்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக சிறுவனின் சார்பில் லிம்பாயத் போலீஸ் நிலையத்தில் புகாரும் தரப்பட்டது.

இந்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை விசாரித்த சூரத் போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அனிதா வனானி, காத்வியை, சூரத்திலிருந்து மோர்பி பகுதிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவரது சம்பள உயர்வும் அடுத்த ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூரத் போலீஸ் துணை கமிஷனர் (சிறப்புப் பிரிவு) ஹீத்தல் படேல் கூறும்போது, “சிறுவனை அடித்த விவகாரம் தவறு. இதுபோன்ற நடத்தையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். காத்வியின் ஒரு வருட சம்பள உயர்வை நிறுத்தி வைக்குமாறு மோர்பி பகுதி போலீஸ் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT