உத்தராகண்டில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தை குட்டியை எதிர்த்துப் போராடி தாய், மகளை காப்பாற்றியது.
உத்தராகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டம் கஃபோலி கிராமத்தை சேர்ந்தவர் திரிலோக் சந்திர பாண்டே. இவரது வீட்டின் சமையல் அறைக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் சிறுத்தைக் குட்டி ஒன்று புகுந்தது. அப்போது சமையல் அறையில் இருந்த அவரது மனைவி கமலா தேவி (45), மகள் விஜயா (15) ஆகிய இருவரையும் தாக்கத் தொடங்கியது. இதனால் இருவரும் உதவி கேட்டு அலறினர்.
இதைப் பார்த்த அவர்களின் வளர்ப்பு நாய் ஜூலி தனது எஜமானர்களை காப்பாற்ற அங்கு ஓடி வந்தது. ஆக்ரோஷத்துடன் சிறுத்தை குட்டியை எதிர்த்து போராடத் தொடங்கியது.
சுமார் 6 மாத வயதுடையதாக தோன்றிய சிறுத்தை குட்டியை எதிர்த்து வளர்ப்பு நாய் சுமார் 20 நிமிடங்கள் போராடியது. இதில் நாய் கடித்ததால் காயம் அடைந்த சிறுத்தை குட்டி அங்கிருந்து வெளியேற முயன்றது. இதில் இரு ஸ்டாண்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.
இதையடுத்து கமலா தேவி அளித்த தகவலின் பேரில் வனத் துறையினர் அங்கு விரைந்து வந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துச் சென்றனர்.
இதற்கிடையில் சிறுத்தை குட்டியிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தாயும் மகளும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதில் கமலாவின் இரண்டு தாடைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. விஜயாவின் தாடையில் சிறிய காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து இருவரும் 14 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து திரிலோக் சந்திர பாண்டே கூறுகையில், "இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பகலில்கூட எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கால்நடைகளை நாங்கள் வீட்டுக்கு வெளியில் கட்ட முடியவில்லை" என்றார்.